top of page

உங்கள் ஜெபங்கள் ஏன் வெறுமையாக உணர்கின்றன, அதை உண்மையில் சரிசெய்வது எது

  • Writer: Henley Samuel
    Henley Samuel
  • May 17
  • 5 min read

மே 17, 2026

Man with white beard holding two stone tablets in a rocky landscape. Dark clouds in the sky add drama. Tablets have carved text.
அதிக கட்டுப்பாடு அல்லது முயற்சியின் மூலம் அல்ல, நீங்கள் முழுமையாக கிருபைக்குள் வரும்போதுதான், உங்கள் மீதான நியாயப்பிரமாணத்தின் அதிகாரம் முடிவடைகிறது.

நீங்கள் உண்மையாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் ஜெபித்தீர்கள், ஆராதனைகளில் கலந்துகொண்டீர்கள், உபவாசித்தீர்கள், வேதத்தை வாசித்தீர்கள். ஆனாலும் ஏதோ ஒன்று இன்னும் தடைபட்டிருப்பதாக உணர்கிறீர்கள். நீங்கள் எதிர்பார்த்திருந்த அந்த திறப்பு (breakthrough) இன்னும் வரவில்லை. வாக்குத்தத்தம் இன்னும் தொலைவில் இருப்பது போலவே தெரிகிறது. எல்லாவற்றையும் மாற்றக்கூடிய ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் முயற்சி இங்கு பிரச்சனையல்ல. நீங்கள் எந்த உடன்படிக்கையின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதே நீங்கள் சந்திக்கும் பிரச்சனையாக இருக்கலாம். இரண்டு உடன்படிக்கைகள் உள்ளன. அவையிரண்டும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தருவதில்லை.


இரண்டு உடன்படிக்கைகள், இரண்டு விளைவுகள்

எபிரெயர் புத்தகம் கூறுகிறது:

"இப்பொழுதோ இவர் (இயேசு), விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே அதிக விசேஷித்த ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே." - எபிரெயர் 8:6-7

வேதம் என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள். முதலாம் உடன்படிக்கையில் ஒரு பிரச்சனை இருந்ததால், இரண்டாவது உடன்படிக்கை தேவைப்பட்டது. நியாயப்பிரமாணம் மற்றும் மனிதனுடைய சுயசெயல்பாட்டின் மீது கட்டப்பட்ட பழைய உடன்படிக்கையால், நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்களை ஒருபோதும் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, இயேசுவையே மத்தியஸ்தராகக் கொண்டு, சிறந்த வாக்குத்தத்தங்களின் மீது கட்டப்பட்ட புதிய உடன்படிக்கை வந்தது.

இன்றைய சோகம் என்னவென்றால், பல விசுவாசிகள் இரண்டு உடன்படிக்கைகளிலும் தலா ஒரு காலை வைத்திருக்கிறார்கள். அவர்கள் பெயருக்குப் புதிய உடன்படிக்கையைச் சொல்லிக்கொள்கிறார்கள், ஆனால் நடைமுறையில் பழைய உடன்படிக்கையின் மூலமாகவே தேவனிடம் வருகிறார்கள். அவர்கள் நியாயப்பிரமாணத்தையும் கிருபையையும் கலந்துவிடுகிறார்கள். பழைய தோற்பைகளில் புதிய திராட்சரசத்தை ஊற்ற முடியாது என்று இயேசு எச்சரித்தார். அப்படிச் செய்தால் அது வெடித்துவிடும். அப்படி வெடித்துச் சிதறுவது உங்கள் விசுவாசத்தின் வல்லமையே ஆகும்.


நியாயப்பிரமாணம் ஒருபோதும் செய்ய வடிவமைக்கப்படாத ஒன்று

நியாயப்பிரமாணம் உண்மையில் என்ன செய்கிறது என்பது குறித்து நேரடியாகச் சொல்கிறேன், ஏனெனில் இதைப் புரிந்துகொள்வது உங்களை விடுதலையாக்கும்.

1 கொரிந்தியர் சொல்கிறது:

"மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்." - 1 கொரிந்தியர் 15:56

நியாயப்பிரமாணம் பாவத்திற்கு வல்லமையைக் கொடுக்கிறது. நியாயப்பிரமாணம் தீமையானது என்பதால் அல்ல, மாறாக ஒன்றைச் செய்ய வேண்டாம் என்று நீங்கள் கூறும்போது, அந்த விஷயத்தின் மீதுதான் உங்கள் கவனம் குவியும். நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே உலகத்தில் பாவம் இருந்தது, ஆனால் நியாயப்பிரமாணம் இல்லாத இடத்தில் பாவம் எண்ணப்படுவதில்லை என்று ரோமர் புத்தகம் விளக்குகிறது.

"நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்குமுன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது." - ரோமர் 5:13

பாவம் வெளிப்படையாகத் தெரியவேண்டும் என்பதற்காகவும், தேவன் முன்பாக தங்களின் சொந்த நீதியைக் கோரும் ஒவ்வொரு வாயும் அடைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நியாயப்பிரமாணம் வழங்கப்பட்டது.

"மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறவைகளையெல்லாம் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம். இப்படியிருக்க, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் அவருக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை; நியாயப்பிரமாணத்தினால் பாவம் இன்னதென்று அறிகிற அறிவுண்டாகும்." - ரோமர் 3:19-20

நியாயப்பிரமாணம் உங்களை இரட்சிக்க ஒருபோதும் வடிவமைக்கப்படவில்லை. உங்களுக்கு இரட்சிப்பு தேவை என்பதை உங்களுக்குக் காட்டுவதற்காகவே அது வடிவமைக்கப்பட்டது.

யாக்கோபு இதைச் சேர்க்கிறார்:

"எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறுவானானால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்." - யாக்கோபு 2:10

ஒரு தேர்வில், ஒரு பதிலைத் தவறாக எழுதினால் எல்லா கேள்விகளிலும் தோல்வியடைவது போன்ற ஒரு நிலையை கற்பனை செய்து பாருங்கள். நியாயப்பிரமாணத்தின் வாயிலாக தேவனிடம் வருவது அப்படித்தான் இருக்கிறது. இதில் யாருமே தேர்ச்சி பெற முடியாது.


நியாயப்பிரமாணம் கண்டனத்தைத் தருகிறது, நம்பிக்கையை அல்ல

2 கொரிந்தியர் 3-ஆம் அதிகாரம் நியாயப்பிரமாணத்தை "ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம்" என அழைக்கிறது.

"ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே." - 2 கொரிந்தியர் 3:9

அது, நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த தேவனின் நோக்கத்தைப் பற்றிய விமர்சனம் அல்ல. அது நியாயப்பிரமாணத்தின் இயல்பு என்ன என்பதை விவரிக்கிறது. நீங்கள் செய்தவை மற்றும் செய்யாதவை என்ற மனப்பான்மையோடு ஒவ்வொரு முறையும் நீங்கள் தேவனிடம் வரும்போது, நியாயப்பிரமாணம் தன் வேலையைத் தொடங்குகிறது. அது உங்கள் தோல்விகளைப் பட்டியலிடத் தொடங்குகிறது. நீங்கள் தவறவிட்ட கூட்டங்கள், நீங்கள் செய்யத் தவறிய ஜெபங்கள், நீங்கள் முறித்த வாக்குறுதிகள் என ஒவ்வொன்றையும் அது நினைவூட்டுகிறது. “நீ தகுதியற்றவன்” என்று அது சொல்கிறது.

குற்றஞ்சாட்டுகிறவன் உங்கள் கவனத்தை உங்கள் செயல்பாடுகளின் மீதே வைத்திருப்பானானால், உங்கள் திறப்பு (breakthrough) எங்கே இருக்கிறதோ அந்த தேவ பிரசன்னத்திற்குள் நீங்கள் வராமல் உங்களை அவனால் தடுத்து நிறுத்த முடியும்.

அது எதிரியின் தந்திரம். அவன் உங்களை முற்றிலும் விசுவாசிக்காதவராக மாற்ற வேண்டிய அவசியமில்லை. உங்களை நியாயப்பிரமாண உணர்விலேயே வைத்திருந்தால் அவனுக்குப் போதுமானது. ஏனெனில் ரோமர் 6:14 சொல்கிறது:

"நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது." - ரோமர் 6:14

இதை மீண்டும் கவனமாகப் படியுங்கள். பாவம் உங்களை மேற்கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம், நீங்கள் கடினமாக முயற்சி செய்தீர்கள் என்பதல்ல. நீங்கள் நியாயப்பிரமாணத்தின் கீழ் அல்ல, கிருபையின் கீழ் இருக்கிறீர்கள் என்பதே அதன் காரணமாகும். ஒரு ரகசிய பாவத்தில் தொடர்ந்திருப்பது என்பது கட்டுப்பாட்டுப் பிரச்சனை அல்ல. அது ஒரு வெளிப்பாடு தொடர்பான பிரச்சனை. தேவனின் அன்பையும் கிருபையையும் நீங்கள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதே அதன் அர்த்தமாகும்.


நியாயப்பிரமாணம் செய்ய முடியாததை கிருபை செய்கிறது

தீத்து புத்தகம் இதைத் தெளிவாகக் கூறுகிறது:

"ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, நாம் அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணும்படி நமக்குப் போதிக்கிறது." - தீத்து 2:11-12

கிருபைதான் உண்மையில் பரிசுத்தத்தை உருவாக்குகிறது. நியாயப்பிரமாணம் அல்ல. விதிகள் அல்ல. கிருபையே! தேவனின் அன்பையும் அவருடைய கிருபையையும் நீங்கள் உடுத்திக்கொள்ளும்போது, அது உலக காரியங்களிலிருந்து உங்களை விலகச் செய்கிறது. அழிவுக்குக் காரணமானவற்றிலிருந்து சுயமாகவே, இருதயப்பூர்வமாகத் திரும்பும் ஒரு மாற்றத்தை அது உங்களில் உருவாக்குகிறது.

நியாயப்பிரமாணம் உங்களை வெளியிலிருந்து கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. கிருபையோ உங்களை உள்ளிருந்து மாற்றுகிறது.

ரோமர் புத்தகம் தியானிக்கவேண்டிய ஒரு காரியத்தை எச்சரிக்கையாகத் தருகிறது:

"நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போகும், வாக்குத்தத்தமும் அவமாகும்." - ரோமர் 4:14

நீங்கள் ஒரு வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்காகக் காத்திருக்கிறீர்கள், ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை என்றால், உங்களையே நீங்கள் இதைக் கேட்டுக்கொள்ளுங்கள்: நான் உண்மையில் எந்த உடன்படிக்கையின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்? நியாயப்பிரமாணத்தை அடிப்படையாகக் கொண்ட விசுவாசம், கிருபையை அடிப்படையாகக் கொண்ட வாக்குத்தத்தங்களைப் பெற முடியாது. உங்கள் விசுவாசத்திற்கு சரியான அடித்தளம் தேவை, அந்த அடித்தளமே புதிய உடன்படிக்கை.


நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது பதிலல்ல; அவர் என்ன செய்தார் என்பதே பதில்

நீங்கள் ஜெபத்தில் தேவனிடம் வரும்போது, கிறிஸ்து என்ன செய்திருக்கிறார் என்பதன் மூலம் வாருங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதன் மூலம் அல்ல. இதயங்கள் சுத்திகரிக்கப்பட்டவர்களாய், விசுவாசம் தரும் முழு நிச்சயத்துடன், நேர்மையான இருதயத்தோடு தேவனை அணுகுங்கள். சிலுவை உங்களை வரலாற்றுரீதியாக மட்டும் மன்னிக்கவில்லை. அது குற்ற உணர்வின்றி நீங்கள் இன்று தேவனை அணுகுவதற்காக உங்களது மனசாட்சியை இப்போதே சுத்தி செய்திருக்கிறது.

நீங்கள் செய்யாதவற்றை நினைவூட்ட எதிரி வரும்போது, நீங்கள் செய்த பட்டியலோடு அவனைச் சந்திக்காதீர்கள். ஒரு விஷயத்தைச் சொல்லி அவனை எதிர்கொள்ளுங்கள்: "என்னைச் சுயமாக எதையும் செய்ய முடியாது, ஆனால் என் தேவன் அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்." அதனால்தான் நான் என் சொந்த பெயரில் அல்ல, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். அவரே நியாயப்பிரமாணத்தை முழுமையாக நிறைவேற்றினார். அவர் நிறைவேற்றிய அந்தப் பூரணத்தில்தான் நான் நிற்கிறேன்.


முடிவுரை

தேவன் தூரமாக இருக்கிறார் என்பதால் உங்கள் ஜெபங்கள் தோல்வியடையவில்லை. அவைகள் தவறான உடன்படிக்கையின் வழியே செயல்படுத்தப்படுவதால்தான் வல்லமையை இழக்கின்றன. நியாயப்பிரமாணம் எப்போதும் உங்களைக் குறையுள்ளவராகவே நிறுத்தும். அது அதற்காகத்தான் வடிவமைக்கப்பட்டது. ஆனால், இயேசுவையே மத்தியஸ்தராகக் கொண்டு சிறந்த வாக்குத்தத்தங்கள் மீது கட்டப்பட்ட புதிய உடன்படிக்கை, ஒவ்வொரு தடையும் நீக்கப்பட்டுவிட்டது என்று கூறுகிறது. நீங்கள் அதைச் சம்பாதித்தீர்கள் என்பதற்காக அல்ல. அவர் அதை உங்களுக்கு வழங்கியிருக்கிறார் என்பதற்காகவே. இன்றே அந்த உடன்படிக்கைக்குள் முழுமையாக அடியெடுத்து வையுங்கள். இரண்டையும் கலப்பதைத் நிறுத்துங்கள். உங்களை நீங்களே அளவிடுவதை நிறுத்துங்கள். கிருபை உங்கள் அடித்தளமாக இருக்கட்டும், பின் உங்கள் வாழ்வில் துளிர்க்கப் போவதைப் பாருங்கள்.


சிந்திப்பதற்கு

  1. நீங்கள் தேவனிடம் வரும்போது, நீங்கள் செய்தவை மற்றும் செய்யாதவை குறித்த மனதின் பட்டியலோடு அறியாமலேயே அணுகிக் கொண்டிருக்கிறீர்களா? கிறிஸ்து ஏற்கனவே செய்து முடித்தவற்றின் மூலம் மட்டுமே நீங்கள் தேவனை அணுகினால் உங்கள் ஜெப வாழ்க்கை எப்படி மாறும்?

  2. நியாயப்பிரமாணம் அல்ல, கிருபையின் கீழ் இருப்பதுதான் பாவம் உங்களை ஆளாமல் தடுப்பதாக ரோமர் 6:14 கூறுகிறது. கட்டுப்பாட்டின் மூலம் மட்டுமே அடைய முயன்ற அந்த விடுதலையை, எந்தப் பகுதியில் உங்கள் நியாயப்பிரமாண-உணர்விலிருந்து கிருபையின்-உணர்விற்கு மாறுவது பெற்றுத்தரும்?


ஜெபம்

பிதாவே, உத்தமமான வாக்குத்தத்தங்களின் மீது கட்டப்பட்ட புதிய உடன்படிக்கையை எனக்குத் தந்தமைக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் நியாயப்பிரமாணத்தின் கீழ் அல்ல, கிருபையின் கீழேயே இருக்கிறேன் என்று அறிக்கை செய்கிறேன். என் செயல்பாடுகளின் மூலம் அல்ல, இயேசு கிறிஸ்துவின் நிறைவேற்றப்பட்ட செயலின் மூலமாகவே நான் உம்மிடம் வருகிறேன். நான் செய்த காரியங்களைக் கொண்டு என் தகுதியை அளவிட்ட ஒவ்வொரு எண்ணங்களையும் அகற்றி விடுகிறேன். நியாயப்பிரமாணத்தின் ஒவ்வொரு தேவையையும் கிறிஸ்து முற்றிலுமாக நிறைவேற்றிவிட்டார் என்றும், அவரின் அந்தப் பூரணத்திலேயே நான் நிற்கிறேன் என்றும் அறிக்கை செய்கிறேன். இன்று எனது விசுவாசம் புதிய உடன்படிக்கையின் மீது நிற்கிறது, நீர் எனக்கு அளித்த ஒவ்வொரு வாக்குத்தத்தமும் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.


முக்கிய குறிப்புகள்

  • பழைய உடன்படிக்கை பாவத்தை வெளிப்படுத்துவதற்காகவே கொடுக்கப்பட்டது; அது ஒருபோதும் எந்த மனிதனையும் தேவன் முன்பாக நீதிமானாக்குவதற்காக வடிவமைக்கப்படவில்லை.

  • அதிக கட்டுப்பாடு அல்லது முயற்சியின் மூலம் அல்ல, நீங்கள் முழுமையாக கிருபைக்குள் வரும்போதுதான், உங்கள் மீதான நியாயப்பிரமாணத்தின் அதிகாரம் முடிவடைகிறது.

  • பழைய மற்றும் புதிய உடன்படிக்கை எண்ணங்களைக் கலப்பது விசுவாசத்தின் மதிப்பை அழித்து, தேவனின் வாக்குத்தத்தங்களின் வல்லமையை வெறுமையாக்குகிறது.

  • நியாயப்பிரமாணம் கண்டனத்தையும் பாவ உணர்வையும் உருவாக்குகிறது; கிருபையோ மெய்யான பரிசுத்தத்தையும் மாற்றத்தையும் உருவாக்குகிறது.

  • நீங்கள் செய்தவற்றைக் கொண்டு தேவனை அணுகுவதைப் பார்க்கிலும், கிறிஸ்து உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதன் மூலம் தேவனை அணுகுவதே கேட்கப்படும் ஜெபத்திற்கான அடித்தளமாகும்.


இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் ஹென்லி சாமுவேல் ஊழியங்களுக்கு உரிமையானது. எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவது தொடர்பான அனுமதிகளுக்கும் மேலும் விபரங்களுக்கும் contact@henleysamuel.org. என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


இந்த வல்லமையான செய்தியைப் பற்றி மேலும் ஆழமாக அறிய, கீழே உள்ள எங்கள் யூடியூப் வீடியோவில் முழு பிரசங்கத்தையும் தமிழில் பாருங்கள்.


Comments


© 2025 by Henley Samuel Ministries. All Rights Reserved.

bottom of page