top of page

தேவன் அதை சொன்னார், அது எல்லாவற்றையும் மாற்றுகிறது

  • Writer: Henley Samuel
    Henley Samuel
  • Jun 4
  • 3 min read

ஜூன் 04, 2026

Stormy sea with crashing waves against rocky cliffs under dark, dramatic clouds. Mood is intense and turbulent, with a mix of green and gray hues.
கர்த்தருடைய சத்தம் உங்கள் தண்ணீர்கள் மேல் இருக்கிறது, அதனுடைய அர்த்தம் தேவனின் வார்த்தை உங்கள் வாழ்க்கையை நெருக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் மேலாக நிற்கிறது.

வாழ்க்கையில் உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் ஒரே நேரத்தில் உங்களை நெருங்கி வருவது போல் தோன்றும் தருணங்கள் உண்டு. பிரச்சனைகள் குவியும். சூழ்நிலை கட்டுப்படுத்த முடியாததாக தோன்றும். அந்தத் தருணங்களில் மக்களிடமிருந்தோ, அமைப்புகளிடமிருந்தோ, வளங்களிலிருந்தோ, ஏதேனும் ஆறுதலைத் தரக்கூடிய எதிலிருந்தோ சாத்தியமான ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரு தீர்வைக் காண தூண்டுதல் இருக்கும். ஆனால் இன்று காலை, உங்கள் ஆவிக்குள் ஆழமாகப் பதிய வேண்டிய ஒரு உண்மை இருக்கிறது: உங்களுக்கு மிகவும் தேவையானது வெளியிலிருந்து வரும் தீர்வு அல்ல. உங்களுக்குத் தேவையானது தேவனின் சத்தம்.


தேவன் முழங்கும்போது, ஏதோ ஒன்று மாற வேண்டும்

உங்கள் வேதாகமத்தை யோபு 37:5 -ல் திறங்கள், அங்கே நீங்கள் இந்த அற்புதமான வார்த்தைகளைக் காண்பீர்கள்:

"தேவன் தம்முடைய சத்தத்தினால் ஆச்சரியமாய் முழங்குகிறார்; நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களைச் செய்கிறார்." - யோபு 37:5

தேவன் ஆச்சரியமாய் முழங்குகிறார். அதை மீண்டும் உங்களுக்குள்ளே சொல்லுங்கள். தேவன் ஆச்சரியமாய் முழங்குகிறார். அந்த இடிமுழக்கம் வரும்போது தேவனின் வார்த்தை உங்கள் சூழ்நிலையில் கடந்து வரும்போது ஏதோ ஒன்று மாற வேண்டும். அது அப்படியே இருக்க முடியாது. இயற்கை உலகில் இடிமுழக்கம் எவ்வாறு வரப்போவதை அறிவிக்கிறதோ, அதேபோல தேவனின் வார்த்தை உங்கள் சூழ்நிலைகளை விடப் பெரிய ஒன்று வருவதை அறிவிக்கிறது. நீங்கள் இதுவரை கண்டிராத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். நீங்கள் இதுவரை கேட்டிராத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். நீங்கள் கற்பனை கூட செய்திராத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: தேவன் எதையாவது செய்யும்போது, அது நிச்சயமாகவே பெரியதாக இருக்கும்.


கர்த்தருடைய சத்தம் உங்கள் தண்ணீர்கள் மேல் இருக்கிறது

சங்கீதம் 29:3 பக்கம் திருப்பி, அது என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்:

"கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் முழங்குகிறது; மகிமையுள்ள தேவன் இடிமுழக்கம்போலச் சத்தமிடுகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்." - சங்கீதம் 29:3

வேதாகமம் தண்ணீர்களைப் பற்றி பேசும்போது, அது பெரும்பாலும் உங்களை நெருக்கிக்கொண்டிருக்கும் சூழ்நிலைகளைப் பற்றியே பேசுகிறது - உங்கள் குடும்பத்திற்கு எதிராக எழும் பிரச்சனைகள், எல்லா பக்கங்களிலும் உங்களைச் சூழ்ந்து கொள்வது போல் தோன்றும் சவால்கள். இந்த வசனம் உங்களுக்கு ஒரு வல்லமையான காரியத்தைச் சொல்கிறது: கர்த்தருடைய சத்தம் அந்தத் தண்ணீர்களுக்குக் கீழே இல்லை. அது அந்தத் தண்ணீர்களுக்குப் பக்கத்தில் இல்லை. அது தண்ணீர்களுக்கு மேலாக இருக்கிறது.உங்களுக்குப் பல பிரச்சனைகள் அதாவது திரளான தண்ணீர்கள் இருப்பதாக உணர்ந்தால், இதைக் கேளுங்கள்: மகிமையுள்ள தேவன் திரளான தண்ணீர்களின்மேல் இடிமுழக்கம்போலச் சத்தமிடுகிறார். உங்கள் கஷ்டங்களின் எண்ணிக்கையால் அவர் திணறடிக்கப்படுவதில்லை. அவர் அவை அனைத்தின் மீதும் ஒரே நேரத்தில் முழங்குகிறார்.இந்த வசனத்தை ஏசாயா 43:2-ல் உள்ள வாக்குத்தத்தத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள், அந்தச் சித்திரம் இன்னும் தெளிவாகும்:

"நீ தண்ணீரைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது." - ஏசாயா 43:2

அது ஒரு உடன்படிக்கை வாக்குத்தத்தம். நீங்கள் ஒருபோதும் தண்ணீர்களை எதிர்கொள்ள மாட்டீர்கள் என்று அது சொல்லவில்லை. நீங்கள் ஒருபோதும் அக்கினியின் அருகே நடக்க மாட்டீர்கள் என்று அது சொல்லவில்லை. ஆனால் அது என்ன சொல்கிறது என்றால்: நீங்கள் கடந்து செல்லும்போது, நான் உன்னோடு இருப்பேன். ஆறுகள் பெருகும்போது, அவைகள் உங்கள்மேல் புரளுவதில்லை. அக்கினி உங்களைச் சூழ்ந்தாலும், நீங்கள் வேகாதிருப்பீர்கள்.


அவருடைய பிரசன்னமே பதில்

தேவன் இப்போது உங்களோடு இருக்கிறார். தேவன் இப்போது உங்கள் குழந்தைகளுடன் இருக்கிறார். தேவன் இப்போது உங்கள் குடும்பத்துடன் இருக்கிறார்.

கர்த்தருடைய சத்தம் உங்கள் பிரச்சனையின் மேல் இருக்கிறது. மகிமையுள்ள தேவன் உங்கள் சூழ்நிலையின் மேல் முழங்குகிறார்.

தேவனின் பிரசன்னம் ஒவ்வொரு நுகத்தையும் முறிக்கிறது. கஷ்டம் என்கிற ஒவ்வொரு வெள்ளத்தையும் மேற்கொள்ள தேவனின் பிரசன்னம் உங்களுக்கு உதவுகிறது. வேதனையான சோதனைகள், கவலை, இருளின் காலங்கள் - தேவனின் வார்த்தை அந்த இடங்களுக்கு வரும்போது, அது கிரியை செய்கிறது. அது அற்புதங்களை உருவாக்குகிறது. அது வெறுமையாய் திரும்புவதில்லை. இன்று காலை உங்கள் இதயத்தில் வேரூன்ற வேண்டிய உண்மை இதுதான்: தேவன் பேசியிருக்கிறார் என்பதை நம்புவதற்கு எந்த ஒரு வெளிப்புற மாற்றத்திற்காகவும் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் தேவனின் வாக்குத்தத்தத்தைப் பெறும்போது, அந்த வாக்குத்தத்தம் இடிமுழக்கத்தைப் போன்றது. இடிமுழக்கம் வரும்போது மழை வரும். மாற்றம் வரும். தடைகளை உடைக்கும் வெற்றி வரும். ஏனென்றால் தேவனின் வார்த்தை வெறுமையாய் திரும்புவதில்லை. அது எதற்காக அனுப்பப்பட்டதோ அதைச் செய்யும்.

நீங்கள் தேவனின் வார்த்தையை விசுவாசிக்கும்போது, அது இடிமுழக்கத்தைப் போல் வருகிறது. அந்த இடிமுழக்கம் வரும்போது, அது உங்கள் வாழ்க்கையில் ஒன்றை உருவாக்கும்.

முடிவுரை

இன்று நீங்கள் எதைக் கடந்து சென்றாலும், கர்த்தரின் சத்தம் அதன் மேல் இருக்கிறது. மகிமையுள்ள தேவன் உங்கள் சூழ்நிலையில் அமைதியாக இல்லை. அவர் ஆச்சரியமாய் முழங்குகிறார், மேலும் அந்த இடிமுழக்கம் உங்கள் பெயரைக் கொண்ட ஒரு வாக்குத்தத்தத்தைக் கொண்டுவருகிறது. உங்கள் பிரச்சனையின் மேல் அவருடைய வார்த்தை விடுவிக்கப்பட்டுள்ளது. அவருடைய பிரசன்னம் உங்கள் குடும்பத்தை மூடியிருக்கிறது. அவருடைய வாக்குத்தத்தம் ஒருபோதும் தவறாது. அவர் சொன்னதை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். அதை விசுவாசியுங்கள். அதைப் பேசுங்கள். ஏனென்றால் மழைக்கு முன் எப்போதும் இடிமுழக்கம் வரும் உங்கள் மழையும் வரப்போகிறது.


சிந்தனைக்கு

  1. தேவன் உங்களுக்கு அளித்த வாக்குத்தத்தத்தை நீங்கள் பெற்றுக்கொண்டும், இப்போது அதைத் தீவிரமாக விசுவாசிப்பதை நிறுத்தியிருக்கிறீர்களா? இன்று உங்கள் சூழ்நிலையின் மீது அந்த வார்த்தையை மீண்டும் முழங்க விட்டால் அது எப்படி இருக்கும்?

  2. ஒரே நேரத்தில் பல அழுத்தங்கள் அதாவது "திரளான தண்ணீர்கள்" உங்களைச் சூழ்ந்துகொள்ளும்போது, இயல்பாகவே நீங்கள் முதலில் யாரிடம் திரும்புவீர்கள்? சங்கீதம் 29:3 உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் முறையை எவ்வாறு மாற்றக்கூடும்?


ஜெபம்

பரலோகப் பிதாவே, என் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையின் மீதும் ஆச்சரியமாய் முழங்கும் உமது சத்தத்திற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமது வார்த்தை இப்போதே எனது பிரச்சனைகளின் மேல் கிரியை செய்கிறது என நான் அறிக்கையிடுகிறேன். நான் தண்ணீர்களைக் கடந்து செல்லும்போது, நீர் என்னோடு இருக்கிறீர் என்றும், அவைகள் என்மேல் புரளுவதில்லை என்றும் நான் அறிக்கையிடுகிறேன். உமது பிரசன்னம் என்னை மூடியிருப்பதால், அக்கினிஜுவாலை என்னைப் பற்றாது என்று நான் அறிக்கையிடுகிறேன். இன்று உமது வாக்குத்தத்தத்தை என் ஆவிக்குள் ஒரு இடிமுழக்கமாக ஏற்றுக்கொள்கிறேன், எனக்குத் தேவையான ஒவ்வொரு வெற்றியையும் அது உருவாக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். உமது வார்த்தை வெறுமையாய் திரும்புவதில்லை. இயேசுவின் நாமத்தில், ஆமென்.


முக்கிய குறிப்புகள்

  • தேவனின் வார்த்தை உங்கள் சூழ்நிலையில் கடந்து வரும்போது, ஏதோ ஒன்று மாற வேண்டும் - அது ஒருபோதும் வெறுமையாய் திரும்புவதில்லை.

  • கர்த்தரின் சத்தம் உங்கள் தண்ணீர்கள் மேல் இருக்கிறது, அதனுடைய அர்த்தம் தேவனின் வார்த்தை உங்கள் வாழ்க்கையை நெருக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் மேலாக நிற்கிறது.

  • தேவனுடைய வாக்குத்தத்தம் மழை வருவதை அறிவிக்கும் இடிமுழக்கத்தைப் போன்றது; நீங்கள் அதைப் பெற்று, விசுவாசிக்கும்போது வெற்றி நிச்சயம் தொடரும்.

  • தேவனுடைய பிரசன்னம் நுகங்களை முறிக்கிறது, வெள்ளங்களை மேற்கொள்கிறது, மேலும் உங்களை அக்கினி மற்றும் தண்ணீரின் வழியே எவ்வித அழிவுமில்லாமல் கடந்து செல்லச் செய்கிறது.

  • இடிமுழக்கத்தை விசுவாசிக்க, உங்கள் சூழ்நிலைகள் மாறும் வரை நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை அந்த சத்தமே மழை வருவதற்கான முதல் அடையாளமாகும்.


இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் ஹென்லி சாமுவேல் ஊழியங்களுக்கு உரிமையானது. எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவது தொடர்பான அனுமதிகளுக்கும் மேலும் விபரங்களுக்கும் contact@henleysamuel.org. என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


இந்த சக்திவாய்ந்த செய்தியைப் பற்றி மேலும் ஆழமாக அறிய, கீழே உள்ள எங்கள் யூடியூப் வீடியோவில் முழு பிரசங்கத்தையும் தமிழில் காணுங்கள்.


Comments


© 2025 by Henley Samuel Ministries. All Rights Reserved.

bottom of page